யேமனில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக முழுமையான தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு ஹெளத்தி கிளர்ச்சி குழு தற்போது முழுமையான பயங்கரவாத அமைப்பாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள அவர் அந்த அமைப்பு மத்திய கிழக்கின் பொருளாதாரத்திற்கு மாத்திரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை முழு உலகிற்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் குழு அமைதி சமாதானத்திற்கு எதிரான ஈரானின் யுத்தத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் டனி டனொன் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் வருடாந்த வரவுசெலவு திட்டம் 1.2 பில்லியன் டொலர் என தெரிவித்துள்ளதுடன், செங்கடல் ஊடாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதலின்மூலம் அந்த அமைப்பு சுயஸ் கால்வாயை முடக்கும் நிலைக்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மி;ல்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள்; எச்சரிக்கை ஒலிகாரணமாக இரவில் அச்சத்துடன் கண்விழிக்கின்றனர் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய தூதுவர் இந்த வருடம் மாத்திரம் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது 300 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு விடயத்தை நான் தெளிவாக குறிப்பிடவிரும்புகின்றேன் – நாங்கள் போதுமான அளவு அனுபவித்துவிட்டோம்,உலகத்திற்காக நாங்கள் காத்திருக்க மாட்டோம் நாங்கள் எங்கள் பிரஜைகளை பாதுகாப்போம் என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்களை பயங்கரவாத குழுவாக அறிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் கிடியன் சார், ஹெளத்தி கிளர்ச்சியாளர்களை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தால் ஈரான் அந்த அமைப்பிற்கு உதவிகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் சமீபத்தைய கருத்துக்கள் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது நேரடி தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதி போல தோன்றுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது.