ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. தமிழ் சினிமாவில் முதலாளி என்று அழைக்கப்பட்டவர். அவரது மகன் மிதுன் குமார் இப்போது ஹீரோவாகியிருக்கிறார். இயக்குனர்கள் சமுத்திரகனி, மகிழ்திருமேனியிடம் உதவியாளராக இருந்த மிதுன் குமார் களத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனான நடித்தார். இப்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
அப்பா தயாரிப்பாளராக இருந்தாலும் எனக்கு நடிக்கத்தான் ஆசை. நாடகம், தெருக்கூத்துகள் மூலம் நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டேன். சமுத்திரகனி அண்ணனிடமும், மகிழ் திருமேனி அண்ணனிடமும் நான் யார் என்று சொல்லாமலேயே உதவியாளராக இருந்தேன். சினிமா பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். களத்தூர் கிராமம் எனக்கு நடிப்பு கதவை திறந்திருக்கிறது. சமுத்திரகனி அண்ணன் உதவியாளர் மற்றும் ரத்தன்சிவா உதவியாளர் இயக்கும் படங்களில் கதையின் நாயகனான நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். ஹீரோவை விட வில்லன் வேடத்தில் நடிக்கவே பிடித்திருக்கிறது. என்கிறார் மிதுன் குமார்.