ஹிலாரியை விட குறைந்த ஓட்டு பெற்ற ட்ரம்ப் அதிபராவது ஏன்? அமெரிக்க தேர்தலின் சூட்சுமம் இதுதான்!
வாஷிங்டன்: நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பை விட, அதிக வாக்குகளை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்தான் பெற்றிருந்தார்.
அப்படியும் அவர் தோற்க என்ன காரணம் என்பதை அறிவதில்தான் அமெரிக்க தேர்தல் நடைமுறையின் சூட்சுமம் அடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்கி்ழமை நடைப்பெற்று, வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது.
தேர்தல் கணிப்புகள் அனைத்துமே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என கூறிவந்த நிலையில், அவற்றை பின்னுக்குத்தள்ளி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
பதிவான மொத்த வாக்குகளில் ஹிலாரி கிளிண்டன் 59,755,284 வாக்குகளும், டொனால்ட் ட்ரம்ப் 59,535,522 வாக்குகளும் பெற்றுள்ளார் அதாவது, ஹிலாரி கிளிண்டனை விட ட்ரம்ப், 2,19,762 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.
ஹிலாரி கிளிண்டன் ஒட்டுமொத்தமாக அதிகமான வாக்குகளை பெற்றிருந்தாலும், டொனால்ட் ட்ரம்ப் 290 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன் 228 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே டொனால்ட் ட்ரம்ப் தற்போது அதிபராக தேர்வாகியுள்ளார்.
இதுபோல, பாப்புலர் வாக்குகளில் பெரும்பான்மையை பெற்றபோதிலும், எலக்ட்டோரல் காலேஜ் சிஸ்டம் மூலமாக வெற்றி பறிபோன சம்பவங்கள், 1876, 1888 மற்றும் 2000 ஆண்டுகளில், நடைபெற்றுள்ளது.
அது என்ன எலக்ட்டோரல் காலேஜ் சிஸ்டம்?
நம்மூர் எம்.பிக்கள் போலத்தான் இவர்கள் செயல்படுவர். நேரடியாக மக்களால் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்க முடியாது. மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் இந்த எலக்ட்டோரல் உறுப்பினர்கள்தான் அதிபரை தேர்ந்தெடுப்பர். எனவே மொத்த ஓட்டுக்களில் வித்தியாசம் இருப்பினும், அதிக எலக்ட்ரோரல் உறுப்பினரை தேர்ந்தெடுத்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம்.
ஏன் இந்த நடைமுறை?
ஒரு சில மாகாணங்களில் அதிக வாக்குகளை பெற்றுவிட்டாலே ஒருவர் அதிபராகிவிட முடியும் என்ற நிலையை தடுக்க அமெரிக்காவில் இந்த நடைமுறை உள்ளது.
இதன் மூலம், அனைத்து மாகாணங்களிலும், அதிபர் மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
உத்தரபிரதேசத்தில் அறுதி பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி, தமிழகம், கேரளத்தில் முட்டை உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும்.
இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளை தடுக்கவே அமெரிக்காவில் இந்த நடைமுறை.
சில நேரங்களில் ஹிலாரி போல ஜெயிக்க வாய்ப்புள்ளவர்கள் தோற்பதும் இந்த நடைமுறையில் ஒரு சாபக்கேடு என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.