`சேப்பாக்கத்துக்கு பதில் புனே’ எனப் புதுவீட்டுக்குள் புகுந்து முதல் மேட்ச் ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மேட்ச் ஃபிக்ஸிங் புகாரால் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இருவரும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சந்திக்கிறார்கள். இரண்டு போட்டிகளில் வெற்றி, ஒன்றில் தோல்வி என ராஜஸ்தான் ராயல்ஸுடனான இன்றைய ஆட்டம் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு நான்காவது ஆட்டம். ராயல்ஸுக்கு இது ஐந்தாவது ஆட்டம். 2 வெற்றி, 2 தோல்வி என அவர்கள் சமநிலையில் இருக்கிறார்கள்.
பழம் பெருமைகள் உதவாது!
2018 ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பு `சென்னை சூப்பர் கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்’, `சென்னை எப்படிப்பட்ட அணி தெரியுமா?’, `தோனிதான் சூப்பர் கேப்டன் தெரியும்ல’ எனப் பலவித பில்ட் அப்களோடு தொடரைத் தொடங்கியது சென்னை. ஆனால், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸின் பலங்களைவிட பலவீனங்கள் அதிகம் என்பது மற்ற அணிகளுக்கு மட்டுமல்ல, எல்லா கிரிக்கெட் ரசிகனுக்கும் தெரிந்துவிட்டது. இனி ஆட்டம்தான் பேசவேண்டும்.