ஹாங்காங் போராட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது. குற்றம் சாட்டப்படுவோரை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடந்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசு பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடக்கும் போராட்டத்தினால் சீன அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 13 வாரங்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டமும், பேரணியும் தற்போது வன்முறைக்களமாக மாறியுள்ளது.
இந்நிலையில் வார இறுதிநாள் போராட்டத்திற்கு ஹாங்காங் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் நேற்று நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் சாலைத் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதையடுத்து அவர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. அதன் பின்னரும் கலவரம் கட்டுக்குள் வராததால் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது.