புதிய பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில், துண்டுபிரசுரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் வடக்கு கிழக்கிலே நடைபெற இருக்கின்ற நிர்வாக முடக்கலுக்காக வவுனியாவில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி அரசாங்கம் கொண்டு வருகின்ற புதிய பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்படி துண்டுப்பிரசுரம் வழங்குகின்றோம்.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்த அளவு தூரம் தமிழ் மக்களை பாதித்திருக்கிறது, எவ்வளவு தூரம் உயிரிழப்புகள், சொத்தழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதனை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம்.
அதைவிட மிக மோசமான முறையிலே இந்த பயங்கரவாத தடை சட்டம் பாராளுமன்றத்திலே கொண்டு வரப்பட இருக்கின்றது. ஆகவே பாராளுமன்றத்திலே இருக்கக்கூடிய அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த புதிய பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
அதே போல் இதுவரை காலமும் தமிழ் மக்கள்தான் இந்த பயங்கரவாத தடை சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை இருக்கிறது. அதைவிட இனிவரும் காலத்தில் தெற்கிலே இருக்கக்கூடிய சிங்கள முற்போக்கு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள், மாணவர்கள் இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
ஆகவே தமிழ் மக்கள் இதுவரை காலமும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட மோசமான அளவுக்கு தெற்கில் இருக்கக்கூடிய சிங்களவர்களும் பாதிக்கப்பட இருக்கிறபடியால் ஆகவே தமிழ், சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். பயங்கரவாத தடை சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
அதே போல் வடக்கு கிழக்கிலே நடைபெறுகின்ற பௌத்தமயமாக்கல், ஆலயங்கள் இடிப்பது அல்லது பௌத்த சிலைகளை நிறுவுவது போன்ற அனைத்து விடயங்களுக்காகவும், நாளையதினம் இந்த பூரணமான கடையடைப்புக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை, ஆதரவை வழங்க வேண்டும்.
அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு நாங்கள் இந்த வவுனியா நகரில் இருக்கக்கூடிய அனைத்து வர்த்தக நிலையங்கள், அனைத்து பொது அமைப்புகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடைய ஆதரவை கோரி இந்த துண்டுபிரசுரத்தை வழங்க இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.