உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் அதனையும் தூக்கியெறிய தயங்கப் போவதில்லை என டிஜிட்டல் தொழில்நுட்வம் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டம் முன்னெடுக்கப்பட்ட பிரதேசத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் தனக்கான பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற கடமைபட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பதுளை மாவட்டம் உமா ஓயா திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
உமா ஓயாவிலிருந்து அம்பாந்தோட்டைக்கு நிலத்தடியில் தண்ணீரைக் கொண்டுசெல்லும் இந்தத் திட்டம் காரணமாக பதுளை மாவட்டம் உட்பட ஊவா மாகாணத்தில் குளங்கள், ஆறுகள் உட்பட சிறு நீர் ஊற்றுக்களும் வற்றிப்போய்விட்டன.
இதன் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க அரசாங்கம் முறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.