மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ஜமாத் – உத் – தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீதை கைது செய்ய தடை விதித்து, லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும், ஜமாத் – உத் – தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத். இவன், ௨௦௦௮ல், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த, பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான். ஐ.நா., பாதுகாப்பு குழு, ௨௦௦௮ல் வெளியிட்ட பயங்கரவாதிகளின் பட்டியலில், ஹபீஸ் சயீதின் பெயர் உள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவும் கொடுத்து வந்த தொடர் நெருக்கடி காரணமாக, பாக்., அரசு, 2017ல், ஹபீசை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தது. சமீபத்தில், அவன் விடுதலை செய்யப்பட்டான்.தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதில், பாக்., எடுக்கும் நடவடிக்கைகளை பார்வையிட, ஐ.நா., பாதுகாப்புக் குழு, இன்று, இஸ்லாமாபாத் வருகிறது. இந்த நேரத்தில், தான் கைது செய்யப்படலாம் என்பதால், அதற்கு தடை விதிக்கக் கோரி, லாகூர் நீதிமன்றத்தில், ஹபீஸ் சயீது மனு தாக்கல் செய்தான். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை, ஹபீஸ் சயீதை கைது செய்ய, தடை விதித்து உத்தரவிட்டார்.