முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சாய்ந்தமருது மக்கள் பிரதான வீதியினூடாக தோளில் சுமந்து வந்து பள்ளிவாசலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்த்தி மு.கா. கட்சியின் தனித் தலைமைத்துவமாக பிரகடனப்படுத்திய சம்பவம் இடம்பெற்று 17 வருடங்கள் கடந்துவிட்டன.
அப்படிப்பட்ட ஹக்கீம் அவர்களாலும் அவர் தலைமையிலான கட்சியினாலும் சாய்ந்தமருது மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டு இவ்வூர் மக்கள் ஏமாளிகள் என கருதப்பட்டு கட்சியினால் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதுடன் வம்புக்கும் இழுக்கப்பட்டிருக்கிறார்கள்.
கட்சியின் மீதும் ஹக்கீம் மீதும் அக்கறையும் அபிமானமும் அதிகமாக இருந்த இந்த சாய்ந்தமருதில்தான் கட்சிக்கு அல்லாமல் அதன் தலைவர் மீது மக்கள்ஆத்திரம் அடைந்துள்ளார்கள். வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
சாய்ந்தமருது மக்களின் நியாயமான தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை கட்சித் தலைமைத்துவத்தால் ஏமாற்றப்பட்டது மாத்திரமால்லாமல் அவர்களின் நியாயமான போராட்டம் இன்று ஹக்கீம் தலைமையிலான மு.கா. கட்சியினரால் கொச்சைப்படுத்தப்படுகின்றது.
சாய்ந்தமருது மக்கள் தமது நியாயமான கோரிக்கையை வென்றெடுப்பதற்கு தங்களது போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை களமிறக்கியுள்ளனர். இவர்களின் இந்த முடிவு மிகவும் நியாயமானதும், அவசியமானதும் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களின் இந்த நியாயமான முடிவை மதித்து சாய்ந்தமருதிலுள்ள ஆறு வட்டாரங்களிலும் தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்வதில்லை என அறிவித்து அவ்வாறே செயல்படும் நிலையில்
ஹக்கீம் தலைமையிலான மு.காவானது சாய்ந்தமருதில் சாய்ந்தமருது மக்களின் முடிவுக்கு மாற்றமாக அம்மக்களின் நியாயமான தனியான உள்ளூராட்சி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் பங்கு கொள்ளாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயலாக இருப்பதுடன் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை மழுங்கடித்து அந்த மக்களை வம்புக்கு இழுத்து ஆத்திரப்படுத்தி மோத வைக்கும் செயல்பாகவே கருதவேண்டியுள்ளது.
சாய்ந்தமருது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீதிகளில் படுத்துறங்கி போராடிய போதும் சாய்ந்தமருதிலுள்ள வர்த்தகர்கள் மூன்று நாட்களாக தமது வர்த்தக நிலையங்களை மூடி வீதியில் இறங்கியிருந்த போதிலும் , அது தொடர்பில் கவனம் செலுத்தாத ஹக்கீம் தலைமையிலான மு.கா, தற்போது இவ்வாறு செய்திருப்பது மிகவும் தவறான நடவடிக்கையாகும்.
சாய்ந்தமருது ஆறு வட்டாரங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் மு.கா. செயல்பாடானது சாய்ந்தமருது மக்களை ஏமாளி மக்களாகவும் எளிதில் ஏமாற்றக்கூடிய மக்களாகவும் ஹக்கீம் தலைமையிலான மு.கா கட்சியினர் பார்க்கின்றார்கள் என்றே நம்ப வேண்டியுள்ளது.
கட்சியின் தலைவரான ஹக்கீமுக்கும் மு.கா கட்சியின் வளர்ச்சிக்கும் மிகப் பங்களிப்புச் செய்த சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பிலான போராட்டங்களுக்கு மு. கா. ஒரு அங்கமாகவே இம்மக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்க வேண்டும். குறைந்தது சாய்ந்தமருதில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் நேரடி அரசியல் செயற்பாடுகளை விட்டும் விலகியிருந்து வீணான பிரச்சினைகளைத் தவிர்ந்திருக்க முடியும்.
தற்போது சாய்ந்தமருதில் மு.கா வேட்பாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முடிவுக்கு மாற்றமாக சாய்ந்தமருதில் ஏதாவது ஒரு கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் போது பிரச்சினைகள் எழும் என்பது யாவரும் அறிந்த விடயமாக இருந்தது.
சாய்ந்தமருதில் மு.கா. கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினால் வேண்டத்தகாத சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதை ஹக்கீம் அறியாதவருமில்லை. அப்படி இருந்தும் அமைச்சர் ஹக்கீம் வேண்டுமென்றே தனது கட்சி வேட்பாளர்களை சாய்ந்தமருதில் களமிறக்கி, சாய்ந்தமருது மக்களின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டு மக்களை வம்புக்கு இழுத்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சியின் தனித்தலைவராகப் பிரகடணப்படுத்திய சாய்ந்தமருது மக்கள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அதாவது 17 வருடங்களுக்குப் பின் என்ன தீர்ப்பை வழங்கி பாடம் புகட்டப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்