ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வழக்கம்.
ஆடி-18-ஐ முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தவாறே காவிரி தாயாருக்கு நேற்று நம்பெருமாள் சீர் கொடுத்தார்.
ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வழக்கம். இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலையில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார்.
அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை நடைபெறும். அப்போது பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். பின்னர் நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு மூலஸ்தானம் சென்றடைவார்.
ஆனால் இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் ஆடி-18-ம் நாளான நேற்று நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கிருந்தவாறே காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.15 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு மாலை 4 மணியளவில் அலங்காரம், அமுது கண்டருளினார்.
பின்னர் நம்பெருமாள் அங்கிருந்தபடியே மாலை 4.45 மணிக்கு காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் அர்ச்சகர்கள் மங்கல பொருட்கள் அடங்கிய தட்டை தலையில் சுமந்தவாறு ராஜகோபும் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக அம்மாமண்டபம் வந்து காவிரி தாயாருக்கு சீர் கொடுத்தனர்.
பின்னர் மாலை 5.45மணிக்கு வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.