ஸிம்பாப்வே அணிக்கு எதிராக ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க துடுப்பாட்டத்திலும் டில்ஷான் மதுஷன்க பந்துவீச்சிலும் அசத்திய போதிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
அப் போட்டியில் அபார சதம் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்த வருடம் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையை சரித் அசலன்க பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, பதிலுக்கு ஸிம்பாப்வே துடுப்பெடுத்தாடியபோது 2 ஓட்டமற்ற ஓவர்கள் வீசி 2ஆவது ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி டில்ஷான் மதுஷன்க எதிரணியை திக்பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, உதவி அணித் தலைவர் சரித் அசலன்கவின் அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரவு 7.09 மணிக்கு மழைபெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
ஆனால், மழை தொடர்ச்சியாக பெய்ததால் இரவு 9.17 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இப் போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அணிக்கு மீள அழைக்கப்பட்ட அவிஷ்க பெர்னாண்டோ முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
எனினும் 41 ஓட்டங்ளைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 24 ஓட்டங்களைப் பெற்ற ஜனித் லியனகேவுடன் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் பகிர்ந்த அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.
அப்போது 13 ஓட்டங்களைப் பெற்றிருந்த சரித் அசலன்க, அதன் பின்னர் மத்திய மற்றும் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து இலங்கைக்கு 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து கடைசி ஓவரில் 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 185 ஓட்டங்களாக இருந்தபோது தசுன் ஷானக்க ஆட்டம் இழந்தார்.
அப்போது 52 ஓட்டங்கள் பெற்றிருந்த சரித் அசலன்க 10 ஓட்டங்களைப் பெற்ற மஹீஷ் தீக்ஷனவுடன் 7ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்களையும் 18 ஓட்டங்களைப் பெற்ற துஷ்மன்த சமீரவுடன் 8ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 95 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்ளைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரிச்சர்ட் ங்கராவா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பராஸ் அக்ரம் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.