ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல் 2018 -ல் இன்று புனே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் முதல் முறையாக மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே சென்னை அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். சென்னை அணியில் முரளி விஜய்க்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பினார். ஹர்பஜனுக்குப் பதிலாகக் கரண் ஷர்மா சேர்க்கப்பட்டிருந்தார். தொடக்க ஆட்டக்காரராக ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். அம்பதி ராயுடு 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய ரெய்னா, வாட்சனுடன் இணைந்து அதிரடியாக விளையாட, சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. அரை சதத்தை நெருங்கிய ரெய்னா 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். சந்தித்த இரண்டாவது பந்திலே பவுண்டரி அடித்த அவர், அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்க முயல, அது கேட்ச் ஆனது. அடுத்ததாக பிராவோ களமிறங்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம், தன் அதிரடியில் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார் வாட்சன். அவர், 51 பந்துகளில் சதமடித்தார். இது அவருக்கு 3 -வது ஐ.பி.எல் சதமாகும். 57 பந்துகளில் 106 ரன்கள் எடுத்த வாட்சன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. பிராவோ (24), ஜடேஜா(2) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணிதரப்பில் ஸ்ரேயேஸ் கோபால் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்,