மதுரை ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக, மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்தார்.சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வைரமுத்துதெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துஉள்ளது. ‘அவர் ஸ்ரீவி., ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.மதுரையில் நேற்று அனைத்து இந்துஅமைப்புக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியதாவது:
இறைவன், அனைவரையும் ஒன்றாக தான் பார்க்கிறான். நமக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தான் ஜாதி, மதங்களை நம் முன்னோர்கள் தோற்று வித்தனர்.
உண்ணாவிரதம்
ஆண்டாளை இழிவாகபேசிய வைரமுத்து,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாளை(இன்று) காலை 9:00 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியில் உண்ணாவிரதத்தை துவங்குகிறேன். இனி யாரும் எந்த கடவுளைபற்றியும் அவதுாறாக பேசக்கூடாது, என்றார்.நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியாளர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ”ஆண்டாளை தேவதாசி என சுபாஷ் சந்திர மாலிக்என்பவர் கூறியதாக வைரமுத்து கூறினார்.
ஆனால், அவர் அப்படி எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என்பதுஇன்று தெளிவாகிவிட்டது. ஆண்டாள் குறித்து தவறாக பேசியவருக்கு இறைவன் பெரிய துன்பத்தை கொடுத்துவிடக்கூடாது. இதுவரை செய்த பாவங்களும், இனி செய்யப் போகும்பாவங்களும் தீயில் சாம்பலாகி போகட்டும்,” என்றார்.
பிழைப்பிற்காக
மதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில், ”தவறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்காமல், வருத்தம் தெரிவிக்கிறார். சிலர் தமிழுக்காக உழைக்கிறார்கள் இவர்,பிழைப்பிற்காக தமிழை பையில் வைத்துக்கொண்டு திரிகிறார்,” என்றார்.பிராமண சங்க மாநில தலைவர் நாராயணன், சின்மயா மிஷன் சிவயேகானந்தா, ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்குழு தங்கராஜ், பா.ஜ., மகளிரணி தலைவி மகாலட்சுமி, நகர் தலைவர் சசிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி பாலா மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.