”ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் தெய்வம் குறித்து வைரமுத்து அவதுாறு பேச்சால் இந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை இழிவாக பேசுவதை தடுக்காமல் விட மாட்டோம்,” என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.
ஆண்டாள் கோயிலில் மக்கள் முன்னிலையில் வைரமுத்து மன்னிப்பு கோரும்படி நாட்டுப்புற கலை பேராசிரியை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மதுரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை எச்.ராஜா நேற்றிரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வயோதிக காலத்தில் உண்ணாவிரதம் இருப்பதை தவிர்க்கும்படி விஜயலட்சுமியிடம் கேட்டு கொண்டேன். அவர் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர வேண்டும்; அதற்காக அவர் நலமுடன் இருக்க வேண்டும். இதை ஒப்புக்கொண்டு நாளை (இன்று) ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக கூறியுள்ளார்.
கடவுள் மறுப்பு என்பது அவரவர் விருப்பம். பிற மதத்தினரை மதிப்பதும், இந்து மதத்தையும், இந்து தெய்வங்களை மட்டும் இழிவாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்; நிறுத்த வைப்போம். வைரமுத்துவின் அவதுாறு பேச்சால் இந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தீயோரை தெய்வம் நின்று கேட்கும்; இது நிச்சயம் நம் கண் முன்னே நடக்கும், என்றார்.பா.ஜ., நிர்வாகிகள் சசிராமன், சுசீந்திரன், ரவிபாலா, ராஜரத்தினம், சிவபிரபாகரன் உடனிருந்தனர்.