தமிழ் திரையுலகில் இரண்டாம் நிலை நட்சத்திர நடிகராக பவனி வரும் நடிகர் வைபவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரணம் அறம் தவறேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 23ம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டத்தை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ரணம் அறம் தவறேல்’ படத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ்வதி மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்டிகேட்டட் க்ரைம் த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மது நாகராஜன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து பெப்ரவரி 23ஆம் திகதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான வைபவ், குற்ற சம்பவங்களில் துப்பு துலக்கும் புலனாய்வு காவல் துறையினருக்கு உதவி புரியும் முக புனரமைப்பு ஓவிய கலைஞர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதாபாத்திரமான இதில் வைபவ் வழக்கமான முக பாவனை (?) உடன் நடித்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் புலனாய்வு தொடர்பான காட்சிகள் படத்தை பற்றிய பாசிட்டிவான எண்ணத்தை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் திரைப்படம் வைபவ் நடிப்பில் வெளியாகும் 25வது திரைப்படம் என்பதால் கூடுதல் கவனத்தை கவர்ந்திருக்கிறது.