மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்தனர் என்று விமர்சித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதுதொடர்பாக மதிமுக, விசிகவினரிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. மேலும், திருமாவளவன் மீது வருத்தம் தெரிவித்து மதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் திருமாவளவன் நேற்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மிகப்பெரிய பங்களிப்பு அளித்தவர் வைகோ என்பதை நாடு அறியும். அதற்காக அவர் சந்தித்த அரசியல் பின்னடைவு, சிறைக் கொடுமைகள், அவரது குடும்பமே சந்தித்த பாதிப்புகள் ஏராளம்.
விடுதலைப் புலிகள் குறித்து வைகோ உரையாற்றினால், இளைஞர் பட்டாளம் திரண்டு வரும் என்பது வரலாற்று உண்மை. இந்நிலையில், அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வைகோ பெயரைக் குறிப்பிட்டு குதர்க்கமான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல் கடந்து சென்றேன். அது தவறானப் புரிதலுக்கு இடம் தந்தது. இதற்காக வைகோ வருத்தப்படக் கூடாது என்பதற்காக, அவரிடம் நேரில் பேச விரும்பினேன். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினை என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மன நிறைவாக இருந்தது என்றார்.