விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துக்கொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் இராணுவ தளபதியுமான அவர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புகளின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஒரு வேளை பிரபாகரன் இருந்திருப்பார் என்றால், நாட்டின் அரசியல்வாதிகள் இப்படி மேலும் கீழும் குதித்து பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள்.
சிலரது அரசியலை நான் ஏற்க மாட்டேன்
நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை. ஜனாதிபதி பதவிக்கு நான்கு போட்டியிடுகின்றனர். எமது கட்சியின் தலைவர் மற்றும் மேலும் மூன்று போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு முடிவுகளை காணமுடியும்.
சில அரசியல் கட்சிகளில் இருக்கும் சிலரது அரசியலை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர்களில் சிலர் ஆதரவளித்தாலும் நான் விரும்ப மாட்டேன். அது எனது அரசியல்.
எப்படியாவது தலைகளை தேடி திருட்டு அரசியல்வாதிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கும் வாக்களிக்காமல் இருந்து நல்லது என நான் கருதுகிறேன்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதை கட்சியில் உள்ள அனைவரும் ஆதரித்துள்ளனர். ஏனைய கட்சிகளுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
பேச்சுவார்த்தை நடத்தும் சில தரப்பினர் குறித்து எனக்கு தெளிவில்லை. இது எனது தனிப்பட்ட அரசியல். மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இன்று சரி என்று சொல்லும் நபர் நாளைய தினம் முடியாது என்கின்றார்.
அப்படி ஒரு விளையாட்டு நடப்பதுடன் இழுப்பறி தொடர்கிறது.
தமிழத் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருப்பதால் எமக்கு அருகில் அவர்களின் நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர். விக்னேஸ்வரன் வாக்களிப்பதில்லை என அறிவித்துள்ளார்.
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அல்ல. அவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளில் இருக்கலாம். நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவான வாக்குகள் இருக்கின்றன.
சுமார் 150 வாக்குகள் இருக்கின்றன. அந்த கட்சி ஜனாதிபதி பதவி விடயத்தில் பிளவுப்பட்டுள்ளதால், ஒரு தரப்புக்கு அதிகளவிலான வாக்குகள் இருக்கின்றது.
மறுத்தரப்புக்கு வாக்குகள் குறைவு. அது எனக்கு தேவையில்லாத விடயம் என்பதால், பெயர்களை கூறவிரும்பவில்லை. வாக்குகள் சரிசமமாக பிரிந்தால், எமக்கு சாதகமாக அமையும். அந்த கட்சியின் வாக்குகள் சமமாக பிரியுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது.
ஒரு வேளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகி, சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்கினால், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்கள் எதுவுமில்லை.
அப்படி பொறுப்பேற்றால், கோட்டாபயவின் பிரதமர் ரணில் போன்று இருந்தால், அதில் பயனில்லை. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, அப்படியான அதிகார மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
சஜித் பிரேமதாசவை போராட்டகாரர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை போராட்டகாரர்களிடமும், சஜித்திடமும் கேட்க வேண்டும். நான் தொடர்ந்தும் போராட்டம் தொடர்பில் அவர்களுக்கு சார்பாக பேசி வந்தேன் என்பதால், போராட்டகாரர்கள் என்னை விரும்புகின்றனர்.
போராட்டகாரர்களில் சிலருக்கு மாற்றம் என்ன என்பது புரியவில்லை
அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் போராட்டகாரர்கள் இருந்தால், நான் அவர்களுடன் இருப்பேன். கோட்டாபய சென்ற பின்னர், நாடாளுமன்றம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் திருடர்கள். நாட்டின் அரசியல் கலாசாரத்தை நாடாளுமன்றத்தில் இருப்பவர்களே அழித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அது புரியவில்லை என்றால், ஆழமாக சிந்திக்க முடியவில்லை என்றால், முதலில் அவர்கள் இவற்றை புரிந்துக்கொள்ள வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் இன்னும் இப்படி சிறுப்பிள்ளைத்தனமாக எண்ணுகின்றனர். அப்படி நினைத்தால், போராட்டத்தின் மூலம் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
மக்களுக்கு என்ன தேவை என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆழமாக சிந்தித்து புரிந்துக்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை கோருகின்றனர்.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை. இது கட்சித் தலைவர்களுக்கு இடையிலான போட்டி. நான் போட்டியிட்டு இருந்தால், அதனை சந்தர்ப்பத்தில் பார்த்திருக்கலாம்.
இரண்டு பக்கத்திலும் என்னை விரும்புவர்களும் இருக்கின்றனர்,விரும்பாதவர்களும் இருக்கின்றனர். எனது நோக்கம் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வருவதல்ல. நாட்டை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஜனாதிபதியாக பதவிக்கு வராமல் 12 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டேன். நாட்டுக்காக பேசுவேன். சஜித் ஏனைய கட்சிகளின் ஆதரவின்றி வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், எமது கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க நேரிடும்.
நான் பிரதமர் பதவிக்கு வருவேனா அல்லது ரஞ்சித் மத்துமபண்டார பிரதமராக தெரிவு செய்யப்படுவாரா என்று எனக்கு ஜோசியம் கூற முடியாது.
வேறு கட்சிகள் ஆதரவளித்தால்,அந்த கட்சிகள் பிரதமர் பதவியை தமக்கு கோரும்.
இது 1989 ஆம் ஆண்டு அல்ல என்பதை ரணில் புரிந்துக்கொள்ள வேண்டும்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களை கலையாமல் நாடு சென்றால்,இந்த நாடு வறியவர்கள் இருக்கும் நாடாக தொடர்ந்தும் இருக்கும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்து போராட்டத்தை அடக்குவதற்கு இது 1989 ஆம் ஆண்டு அல்ல.
துப்பாக்கிச்சூடு நடத்தி இராணுவத்தை பயன்படுத்தி அடக்குவதை தற்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளாது. இதனை ரணில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
கட்டாயம் தற்போதைய அரசியல் முறை தொடர்பில் வெறுப்பு இருக்கின்றது. இந்த அரசியல் கலாசாரமே நாட்டை அழித்தது.
இதனால், போராட்டத்தின் மூலம் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றும் நடவடிக்கையை நான் எதிர்பார்க்கின்றேன். எனினும் இதனை புரிந்துக்கொள்ளாதவர்கள் போராட்டத்திற்குள் இருப்பது வருத்தத்திற்குரியது எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.