வெள்ளத்தில் மிதக்கிறது வெர்ஜினியா மாகாணம்! -பேரழிவு பகுதியாக அறிவித்தார் ஒபாமா.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நூற்றாண்டில் கண்டிராத கடும் மழைக்கு 23 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள மலைப்பாங்கான மாகாணமான மேற்கு வெர்ஜினியாவில் கடந்த சில நாட்களாக கடும் புயலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கடந்த வியாழக்கிழமை மட்டுமே அங்கு 10 அங்குல (250 மி.மீ) மழை கொட்டியது. இதன்காரணமாக அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இப்படி ஒரு மழை அங்கு பெய்தது இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அந்த மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஓய்வு தளமான கீரின்பியர் கவுன்டி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 66 ஆயிரம் வீடுகள், இருளில் மூழ்கியும்,. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தும் விழுந்துள்ளன. வீட்டு கூரை உச்சிகளில் இருந்தும், மொட்டை மாடிகளில் இருந்தும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை இங்கு புயல் மழைக்கு 23 பேர் பலியாகி உள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் காரணமாக 44 நகரங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது மழை குறைந்து வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதை அடுத்து பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
மேலும், வெள்ள சேதம் குறித்த அறிக்கையை மேற்கு விர்ஜீனியா மாகாண கவர்னர் இயர்ல் ரே தாம்பிலின், அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், மேற்கு வெர்ஜீனியாவை பேரழிவு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.