பரபரப்பான கடைசி ஓவரில் மகமதுல்லா ‘சிக்சர்’ அடிக்க, வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, பைனலுக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் இலங்கை அணி பரிதாபமாக வெளியேறியது. நாளை நடக்கவுள்ள பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
இலங்கை தலைநகர் கொழும்புவில், முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு இந்திய அணி, ஏற்கனவே முன்னேறிவிட்டது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மீண்டும் மோதின. இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு முன்னேறும் என்ற நிலையில், ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
பெரேரா அபாரம்
முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணிக்கு குணதிலகா (4) ஏமாற்றினார். முஸ்தபிஜுர் ‘வேகத்தில்’ குசால் மெண்டிஸ் (11), ஷனாகா (0) வெளியேறினர். உபுல் தரங்கா (5), ‘ரன்–அவுட்’ ஆனார். மெஹதி ஹசன் பந்தில் ஜீவன் மெண்டிஸ் (3) அவுட்டானார். இலங்கை அணி, 41 ரன்னுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின், வங்கதேச பந்துவீச்சை வெளுத்துவாங்கிய குசால் பெரேரா (61), திசாரா பெரேரா (58) அரைசதம் கடந்தனர். இலங்கை அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 159 ரன்கள் எடுத்தது. உதானா (7), தனஞ்செயா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
மகமதுல்லா விளாசல்
சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (0) ஏமாற்றினார். சபிர் ரஹ்மான் (13) நிலைக்கவில்லை. முஷ்பிகுர் ரஹிம் (28) ஓரளவு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய தமிம் இக்பால் (50) அரைசதமடித்து ஆறுதல் தந்தார். சவுமியா சர்க்கார் (10), கேப்டன் சாகிப் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். மெஹிதி (0) ‘ரன்–அவுட்’ ஆனார். கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டது. உதானா வீசிய 20வது 2வது பந்தில் முஸ்தபிஜுர் (0) ‘ரன்–அவுட்’ ஆனார். அப்போது வங்கதேச, இலங்கை அணி வீரர்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அடுத்த 3 பந்தில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த மகமதுல்லா வெற்றியை உறுதி செய்தார். வங்கதேச அணி, 19.5 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மகமதுல்லா (43) அவுட்டாகாமல் இருந்தார்.