சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் (04) போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக வேளையோடு நிறுத்தப்பட்டபோது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க அவுஸ்திரேலியா 197 ஓட்டங்களால் பின்னிலையில் இருக்கிறது.
இரண்டாம் நாளன்று 46 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போட்டி பிற்பகல் 2.23 மணிக்குப் பின்னர் தொடரப்படவில்லை.
ஆரம்பத்தில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டத்தை மத்தியஸ்தர்கள் இடைநிறுத்தினர். ஆனால், சுமார் 45 நிமிடங்களின் பின்னர் மழை பெய்ததால் 2ஆம் நாள் ஆட்டம் தொடரப்படவில்லை.
தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடும் டேவிட் வோர்னர் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். உஸ்மான் கவாஜா 47 ஓட்டங்களைப் பெற்றார்.
மானுஸ் லபுஷேன் 23 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பாகிஸ்தான் அதன் முதலாவது இன்னிங்ஸில் 313 ஓட்டங்களைப் பெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 300 ஓட்டங்களைக் கடந்தது இதுவே முதல் தடவையாகும்.
மத்திய வரிசை வீரர்களான மொஹமத் ரிஸ்வான் (88), ஆமிர் ஜமால் (82), அகா சலமான் (53) ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து பாகிஸ்தானைப் பலப்படுத்தியிருந்தனர்.
பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா தொடரில் 2 – 0 என முன்னிலை வகிக்கிறது.