கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் துனித் வெல்லாலகே, சரித் அசலன்க ஆகியோரின் சுழற்சியில் தடுமாற்றம் அடைந்த இந்தியா 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.
ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுல் ஆகிய முதல் நால்வரின் விக்கெட்களைக் கைப்பற்றிய 20 வயதான வெல்லாலகே, பின்னர் ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் வீழ்த்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். அவர் விளையாடும் 13ஆவது ஒருநாள் போட்டி இதுவாகும்.
மறுபக்கத்தில் மற்றைய சுழல்பந்துவீச்சாளர் சரித் அசலன்கவும் திறமையாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
39ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சரித் அசலன்க இதற்கு முன்னர் 6 போட்டிகளில் மாத்திரம் பந்து வீசியிருந்ததுடன் மொத்தமாக 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.
கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2022இல் பந்துவீசியிருந்த சரித் அசலன்க 22 போட்டிகளின் பின்னரே இன்றைய தினம் பந்துவீசி தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.
அவர், இஷான் கிஷான், ரவிந்த்ர ஜடேஜா, ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா கணிசமான ஓட்டங்களைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போன்ற இந்திய முன்வரிசை வீரர்களால் அசத்த முடியாமல் போனது.
ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் நிதானமும் அதிரடியும் கலந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 67 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், ஷுப்மான் கில் (19), விராத் கோஹ்லி (3), ரோஹித் ஷர்மா ஆகியோர் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இந்தியா நெருக்கடியை எதிர்கொண்டது.
ரோஹித் ஷர்மா 48 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
தனது 248ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 15ஆவது வீரரானார். இந்தியர்களில் 6ஆவது வீரரானார்.
இஷான் கிஷான், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் ராகுல் (39), இஷான் கிஷான் (33) ஆகிய இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அத்துடன் இந்தியா 6 விக்கெட்களை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.
இந்தியா 47 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெடகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சிறு மழை பெய்ததால் மாலை 6.22 மணிக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அத்துடன் மைதானம் முழுவதும் விரிப்புகளால் மறைக்கப்பட்டது.
மழை ஒய்ந்த பின்னர் விரிப்புகள் அகற்றப்பட்டு எல்லைக் கோடுகள் உரிய வகையில் இடப்பட்டு ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடர்ந்தது.
அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களைப் பெற்று இந்தியா 200 ஓட்டங்களைக் கடக்க உதவினார். மொஹமத் சிராஜ் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
80 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி பலமான நிலையில் இருந்த இந்தியா அடுத்த 133 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களையும் பறிகொடுத்தது.
பந்துவீச்சில் துனித் வெல்லாலகே ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சரித் அசலன்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
214 ஓட்டங்ளை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.