வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
அங்கஜன் இராமநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்படுவதாவது :
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டு உரிமையை மீளவும் சைவத்தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரம்பரை பரம்பரையாக வெடுக்குநாறிமலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை சைவத்தமிழ் மக்கள் வழிபட்டு வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியன மக்களுடைய வழிபாட்டு உரிமையை கேள்விக்குட்படுத்தியிருந்தன.
அன்றிலிருந்து இன்று வரை பரம்பரை பரம்பரையாக ஆதிலிங்கேஸ்வரரை வழிபட்ட மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த வருடம் கூட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகம் இனந்தெரியாதோரால் உடைத்தெறிக்கபட்டது.
இவ் விடயம் பாராளுமன்றம் வரை பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. அப்போது ஜனாதிபதி வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
இருப்பினும் அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொலிஸாரால் அநாகரிகமாக நடத்தப்பட்டிருந்தனர். எந்தவித குற்றமும் செய்யாத பக்தர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனூடாக வெடுக்குநாறிமலையில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த மக்களுடைய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு உரிமையை தடுக்கின்ற உரிமை பொலிஸாருக்கு இல்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததன்படி, நிரந்தர தீர்வொன்றை வழங்க வேண்டும். அதனூடாக எமது மக்களுடைய மத நம்பிக்கை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுள்ளது.