மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 12 பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோஸ்டா ரிகா வனப்பகுதியில் விபத்துக்குள்ளான இந்த விமானம் தொடர்பில் அந்த நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. விபத்து தொடர்பான புகைப்படங்களை அரசின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவெற்றம் செய்துள்ளனர்.
வடமேற்கு கோஸ்டா ரிகாவில் அமைந்துள்ள குவானாகாஸ்ட் பகுதியில் குறித்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பயணம் மேற்கொண்ட விமானி உள்ளிட்ட 12 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 10 அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடையாளம் தெரியாத வகையில் மிக மோசமாக உடல்கள் காணப்படுவதால் உரிய சோதனைக்கு பின்னரே எஞ்சியவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 5 பேரும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.