வெங்காயத்தை போலவே வெங்காயத்தாளிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை கடலைப்பருப்புடன் சேர்த்து வடையாக சுட்டும் சாப்பிடலாம். இதோ வெங்காயத்தாள் வடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு – 2 கப்
வெங்காயம் – 2
பூண்டு – 15 பல்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
சோம்பு – கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
கடலைப்பருப்பை முக்கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி காய்ந்த மிளகாய் சேர்த்து கரகககரப்பாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் வெங்காயம், நசுக்கிய பூண்டு, வெங்காயத்தாள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி எண்ணெய்யிலிட்டு பொரிக்க வேண்டும்.
மிதமான தீயில் சில நிமிடம் திருப்பி போட்டு வேகவைத்து கருகிவிடாமல் சிவந்த நிறத்தில் எடுத்தால் கமகம மணத்துடன் கரகர மொறுமொறு வெங்காயத்தாள் வடை ரெடி.