வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா!
“உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும்” என்னும் தலைப்பில் மூன்று தினங்கள் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் முதல் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவுக்கான ஏற்பாடுகள் திறந்த வெளி அரங்கில் கோலாகலமான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தபோதிலும் கடும் மழை காரணமாக இந்த நிகழ்வு இந்துமாமன்ற ஒன்றுகூடத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் உபதலைவர் ரி.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன், நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், பறைச்சமர்கள். உடுக்கையடிப்புகள்,இசைக்கச்சேரி, வீணை இசை, மிருதங்கம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சமுதாயச் சீரழிவைத் தடுக்கும் வகையிலும் இந்த முத்தமிழ் விழா ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது