இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கு பெருமை சேர்த்த அப்போதைய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் (தற்போது குரூப் கேப்டன்) அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்தததற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்… இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]