இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடிக்கும் ‘வீரன்’ எனும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அதிரா ராஜ் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய இயக்குவர் ஏ. ஆர். கே. சரவணன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வீரன்’.
இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அதிரா ராஜ் நடிக்கிறார்.
இவர் ஏற்கனவே ‘அமிகோ கரேஜ்’ படத்தில் நடிகர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி தமிழா இசையமைக்கிறார்.
‘சிவக்குமார் சபதம்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் மூன்றாவது முறையாக ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்கவிழா படப்பிடிப்புடன் சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தமிழா இதுவரை ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமார் சபதம்’, ‘அன்பறிவு’, என ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த ஐந்து படங்களிலும் அவருக்கு புதுமுக நடிகைகளே ஜோடியாக நடித்திருக்கிறார்கள். வீரன்
படத்திலும் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நடித்து வருகிறார் என திரை உலகினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
‘மரகத நாணயம்’ வெற்றிப்படத்தை வழங்கிய இயக்குவர் ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் ‘வீரன்’ உருவாவதாலும், இந்த திரைப்படம் ஃபேண்டசி காமெடி ஜேனரில் தயாராகுவதாலும் இப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.