2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் (Road Safety World Series T20) இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணி மற்றும் பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் அணிகள் இன்றைய தினம் (30) மோதவுள்ளன.
இந்தியாவின் ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பொது மக்கள் மத்தியில் வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும் வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் (Road Safety World Series T20) நடப்புச் சம்பியனான இந்தியா, உப சம்பியனான இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட லெஜெண்ட்ஸ் அணிகள் இருபதுக்கு 20 போட்டி வகையில் நடத்தப்பட்டு வரும் வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்றன.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும், கிரிக்கெட் என்பது அவர்களுக்கு இரத்தத்தில் ஊறிப்போன ஓர் விடயம் என்பதை அவர்கள் இன்றும் வெளிப்படுத்தும் திறமைகளிலிருந்து அறிய முடிகின்றது. துடுப்பாட்ட ஜாம்பவான்களான 53 வயதான சனத் ஜயசூரியவின் ‘அப்பர் கட் ஷொட்’ , 49 வயதான சச்சின் டெண்டுல்கரின ‘ஸ்ட்ரேட் டிரைவ் ஷொட்’ , 53 வயதான பிரையன் லாராவின் ‘லேட் கட்’ , வொட்சனின் அதிரடி துடுப்பாட்டம் ஆகியவற்றை பார்க்க கிடைப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரமாகும்.
அதேபோன்று சமிந்த வாஸ், பிரெட் லீ , நுவன் குலசேகர, அஜன்த மெண்டிஸ், கைல் மில்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு, ஜொண்டி ரோட்ஸ், டில்ஷான் , மொஹமட் கைப் போன்றோரின் களத்தடுப்பு ஆகியவற்றை காணக்கிடைப்பதும் அலாதியானதாகும். அவர்கள் விளையாடும் போட்டிகளைக் காண கணிசமான அளவு ரசிகர்கள் நிரம்பி இருப்பது இன்றும்கூட அவர்களுக்கு உள்ள வரவேற்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலையில், இந்திய லெஜெண்ட்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டியானது, முன்னதாக நேற்று முன்தினம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், மழை காரணமாக போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது தடைபட்டது. பின்னர் இப்போட்டி நேற்றைய தினம் விட்ட இடத்திலிருந்து (136/5 (17 X ஓவர்கள்) தொடரப்பட்டது. இதனால் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியை எதிர்த்தாடிய ஷேன் வொட்சன் தலைமையிலான அவுஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் பென் டன்க் 46 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 175 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை குவித்த நமன் ஓஜா ஆட்டநாயகனாக தெரிவானார்.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் அணி இந்திய அணியுடன் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.