வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள்: துணிச்சலாக செயல்பட்ட குடும்பத்தினர்
கனடா நாட்டில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற திருடனை குடும்ப உறுப்பினர்கள் கடுமையாக போராடி கட்டிப்போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு ஒன்றில் புகுந்து கொள்ளையடிக்க 3 திருடர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், வீட்டிற்குள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பதை தெரியாமலேயே அவர்கள் மூவரும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.
வீட்டிற்குள் நபர்கள் இருப்பதை அறிந்த அதிர்ச்சி அடைந்த மூவரும் அங்கிருந்து வெளியேறி தப்ப முயன்றுள்ளனர்.
ஆனால், துணிச்சலாக செயல்பட்ட குடும்பத்தினர் மூவரையும் தடுத்து நிறுத்தி கட்டி போட முயன்றுள்ளனர். எனினும், மூவரில் இருவர் காரில் தப்பிவிட ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார்.
திருடனை பிடித்ததும் இடுப்பில் அணியும் பெல்ட்டை பயன்படுத்தி அவரது கழுத்தில் கட்டிப்போட்டு தப்பாமல் தடுத்துள்ளனர்.
கூச்சல் சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தவர்கள் அங்கு வர, இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் திருடனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, ‘திருடர்கள் என சந்தேகிக்கப்படும் நபரை பொதுமக்களே கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவரை கட்டி போட்டவுடன் உடனையாக பொலிசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், திருடர்களை பொதுமக்கள் எதிர்க்கொள்ளும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்.
திருடனை பொதுமக்கள் கையும் களவுமாக கட்டிப் போட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.