வீடுகளை எரிப்பதாகவும், சொத்துக்களை அழிப்பதாகவும் அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
நன்றி உள்ள மனிதர்கள் கம்பஹாவில் இருக்கும் வரை ஒரு அடி கூட பின்வாங்கத் தயாரில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 1200 பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு உடுகம்பல வாராந்த சந்தையில் இடம்பெற்றது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கமைய மினுவாங்கொடை பிரதேச சபையினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு புத்தகப் பொதியின் விலை சுமார் 7,500 ரூபாய் ஆகும்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:
“நான் முதலமைச்சராக இருந்தபோது, பிள்ளைகளுக்குக் கல்வியுடன் அறநெறிக் கல்வியையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டின் கலாசாரத்தின்படி பெரியவர்களை நடத்தும் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காகவும் சருதம் அருணெல்லாவைத் தொடங்கினோம்.
மாகாண சபையின் பங்களிப்பின் அடிப்படையில் அந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து அறநெறிப் பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், ஆலயங்கள் என்பனவற்றிற்கு உதவினோம். அக்காலத்தில் ஒவ்வொரு குழந்தையும் அறநெறிக் கல்வி கற்க வேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டு வந்தோம்.
இன்று நமது பிக்குகளின் சொற்பொழிவு முடிந்ததும் அனைவரும் கைதட்டினர். பாடசாலைகளிலும் அறநெறிப் பாடசாலைகளிலும் அதைச் செய்ய குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறோமா? கலாச்சாரத்தை சீரழிக்க கடந்த காலத்தில் என்ன நடந்தது? மக்களின் மனநிலையைப் பற்றி சிந்திக்க இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு குழந்தையையும் அறநெறிப் பாடசாலைக்கு அனுப்ப பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன்.
அறநெறிப் பாடசாலைகளுக்குச் சென்றால் புலமைப்பரிசில், O/L, A/L பரீட்சைகளில் சித்தியடைந்துவிடுவார்களோ என்று எண்ணுபவர்களும் உண்டு. சமூகத்திற்குச் செல்லும் குழந்தைகளின் செயல்பாடுகள் மூலம் தேர்ச்சி பெறத் தவறியது நிரூபிக்கப்படுகிறது.
நாம் எமது பிள்ளைகளை சமூகத்திற்கு விடுவிப்பது நமது வீடுகளுக்கு தீ வைத்தும், கொலை செய்யும், பெற்றோர்களை அடித்து முதியோர் இல்லத்தில் விட்டு வருகின்ற ஒரு சமூகத்துக்காக இருந்தால் நாம் செய்வது சரியான வேலையா? எமக்குத் தேவை மூத்தவர்களுக்கு மரியாதை செய்கின்ற, மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற, சமூகத்துக்கு சுமையில்லாத முறையில் வாழ்கின்ற ஒரு கூட்டத்தை உருவாக்குகின்றதா? அப்படி இல்லாவிட்டால் அது போன்று வீடுகளுக்கு நெருப்பு வைக்கின்ற, அடிக்கின்ற, சண்டை பிடிக்கின்ற சண்டியர்கள் சிலர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்கின்றவர்களை, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்றவர்களை உருவாக்குவதா? நாங்கள் அது பற்றி நல்ல முறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
என்னுடைய தந்தை ரெஜி ரணதுங்க அவர்கள் அன்றிலிருந்து தொடர்ந்தும் அதிக பணத்தை செலவளித்தது அறநெறிக் கல்விக்கும் சாசனாரக்ஷக குழுமத்துக்கும் ஆகும். நாங்கள் எப்போதும் அதைச் செய்வோம். குழந்தைகளின் நல்ல பழக்கங்களை கட்டியெழுப்புவதற்காக பாடசாலைகள் மூலமாகவேனும் சில செயல்கள் நடக்க வேண்டும். நாட்டின் வீதிகள், கட்டிடங்களை செய்வதை விட குழந்தைகளுக்காக நல்ல செயல்களைச் செய்தால் அவர்கள் நாட்டுக்காக நல்ல வேலையைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்கள் உள்ளத்தில் இருக்கிறது.
எங்கள் வீடுகளை எரித்தும், அடித்தும் எங்களை ஊரை விட்டு அனுப்ப முயன்றாலும் நாங்கள் அதைவிட பலசாலிகள். 77ல் என் அப்பாவுக்கும் இவைகள் நடந்தன. வீடுகளுக்கு தீ வைப்பதன் மூலம் நம்மை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று யாரேனும் நினைத்தால், மக்களுக்காக உழைப்பதை நிறுத்துவோம் என்று நினைத்தால் அது நடக்காது. அப்பா காலத்தில் இருந்தே இந்த கிராமத்தில் பணிகள் நடந்துள்ளன என்றால் அதற்கு எங்கள் தலையீடுதான் காரணம். மினுவாங்கொடையில் நன்றி உள்ள மனிதர்கள் இருக்கும் வரை நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம்” என்று கூறினார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை மாணவகர்ளுக்காக அமைச்சர் நீண்டகாலமாக இவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று மற்றும் போராட்டம் போன்ற பல்வேறு காரணங்களினால் அந்த செயற்பாடுகள் சீர்குலைந்தன.
இந்நிகழ்வில் மினுவாங்கொடை பிரதேச செயலாளர் தனுஜா ராஜகருணா, மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் வஜிர ரணராஜா, மினுவாங்கொடை பிரதேச சபையின் செயலாளர் அருணி டி சில்வா மற்றும் பெற்றோர்கள், பிள்ளைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.