வீடு வாங்கும் வெளிநாட்டவர்களிடம் இருந்து 15 சதவீத வரியினை அறிவிடும் ஒன்ராறியோ அரசாங்கத்தின் திட்டம் பலனளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒன்ராறியோவின் வீட்டுச் சந்தை விலைகள் அதிகரித்துச்செல்லும் நிலையில், குறித்த விலையினை கட்டுக்குள் கொண்டுவர மாகாண அரசு புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது. இதில் ஒரு பகுதியாக வீடு வாங்கும் வெளிநாட்டவர்களிடம் இருந்து 15 சதவீத வரியினை அறிவிட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பில் கூறுகையில், “ஒன்ராறியோ அரசாங்கத்தின் இந்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே பரந்துபட்ட அளவில் ஆராய்ந்துள்ளதனால், இந்த அறிவிப்பு எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை.
இந்த திட்டங்கள், விரைவில் ரொறன்ரோ வீட்டுச் சந்தையில் ஒரு நல்ல நிலையினை ஏற்படுத்தும். இந்த திட்டத்தை ரொறன்ரோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது பலனளிக்கும்.
அத்துடன் இந்த விலை அதிகரிப்பில் உளவியலும் பெரும் பங்கு வகிப்பதனால், அவை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். எனினும் இந்த திட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த முடியாது. நாட்டில் பெரும்பாலான இடங்களுக்கு இத்தகைய ஒரு விதிமுறை தேவையற்றது” என கூறினார்.