வி.புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கத் திட்டமிட்டதாக கூறி கிளிநொச்சியில் ஒருவர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்குத் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டி சமூகத் தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கரலிங்கம் சசிகரன் (வயது-30) என்னும் குடும்பஸ்தரே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் 2ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு, சின்ன ஊறணியில் வசிக்கும் சங்கரலிங்கம் சசிகரன் என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாராகிய குடும்பஸ்தர், கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனது தாயாரது வீட்டில் தங்கி நின்று சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்றைய தினம் 30ம் திகதி அவரது வேலைத்தளத்திற்குச் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்படி நபரை தமது கிளிநொச்சி பயங்கரவாதப் பிரிவு அலுவலகத்திற்குவிசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு முயற்சித்ததாகக் குற்றம்சாட்டி அவரை நேற்று மாலையே கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு 2ம் மாடிக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்.
தனது கணவர், கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் பணிபுரியும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக மேற்கொண்டு வந்ததாகவும்,
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறிப்பிடுவதுபோல் தனது கணவர் அப்படியான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை எனவும் தனது கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவியால் தெரிவிக்கப்படுகின்றது.