கொழும்பில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 23 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை, செட்டியார் தெருவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமான முறையில் தொழிலில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
சாத்திரம் பார்க்கும் தொழிலில் ஈடுபட்ட 09 பேரும், துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 09 பேரும் கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்த 05 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உள்ளடங்குவதுடன், 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.