ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி அவர்களது நீண்டகால வேண்டுகோளாக இருந்து வந்த கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடலும் கள பயணமும் நேற்று கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்தின் தலைமையில் செங்கலடி உறுகாமம் பெரு நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின்போது மேற்படி அணைக்கட்டு தொடர்பில் சாத்திய தன்மை மற்றும் அணைக்கட்டினை நிரந்தரமாக அமைப்பதில் உள்ள சாதக, பாதக நிலைமைகள் மற்றும் அதிலுள்ள சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் பின்னர் குறிப்பிட்ட இடங்கள் அமைச்சர் உட்பட அதிகாரிகளினால் சென்று பார்வையிடப்பட்டதுடன் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திலேயே அணைக்கட்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.