பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்புக்களான உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுச்செயற்திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று (20)வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன், இலங்கையில் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக அவர்கள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர்.
இலங்கையில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் உணவுப்பாதுகாப்பு மற்றும் போசணை மட்டம் ஆகியவற்றை விரிவுபடுத்துவதற்கும் அவசியமான சர்வதேச உதவிகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநித ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கையில் விவசாயத்துறையை மீண்டும் வலுப்படுத்துவதை முன்னிறுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐ.நா உலக உணவுச்செயற்திட்டம் ஆகியவற்றின் ஊடாக வழிநடத்தப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையில் விவசாயத்துறையை வலுப்படுத்துதல் மற்றும் உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.