அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம். இருப்பினும் குறித்த எரிபொருள்
ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வெளிநாட்டு கையிருப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தவில்லை. இதனை மேலும் அதிகரிக்க முடியுமா? என ஆராயுமாறு ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார்.
எனவே தான் அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் ஜூன் மாதத்தில் எரிபொருள் ஒதுக்கீட்டை மீண்டும் ஒருமுறை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 7 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது. அதை 14 லீற்றாக
மாற்றுவோம் என நம்புகிறோம். 7 லீற்றாக வழங்கப்படும் முச்சக்கரவண்டியின் கிவ். ஆர் அளவினை 14 லீற்றாக அதிகரிக்கப்படும்.
மேலும் ஏனைய வாகனங்களுக்கு அதேபோல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். விலையை மாற்றியமைக்கும் அதே நேரத்தில் உயர்த்தப்பட்ட அளவுகளை அறிவிப்போம் என்றார்.