அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால், வாழ்க்கைச்சுமை தாங்க முடியாமல் மக்கள் பரிதவிப்பதாகவும், எனவே, பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெற்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகி, மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற தருவாயிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரான சசங்க சம்பத் சஞ்சீவ தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த பொலிஸார் போராட்டத்துக்கு அனுமதி பெறப்படவில்லை எனவும், கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
எனினும், போராட்டக்காரர்கள் அடங்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் சொற்போர் மூண்டது.
இதனையடுத்து சசங்க சம்பத் சஞ்சீவ உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை ,நாவலப்பிட்டி நகருக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.





