சென்னையில் முதல் போட்டியுடன் தொடங்கும் இந்திய-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை நல்லுணர்வுடன் ஆடுவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
“இந்தத் தொடரை நல்லுணர்வுடன் ஆடுவோம் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே கடினமான சவால்கள் இருக்கவே செய்யும். நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
விராட் கோலி அபாயகரமானவர் என்பதை அறிவோம், எனவே இம்முறை அமைதியாகவே ஆடுவோம் என்று நினைக்கிறேன். இதுதான் இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாட உதவும் என்றே கருதுகிறேன்.
இந்திய அணி சமீபமாக நன்றாக ஆடி வெற்றிகளை வெற்றி பெற்று வருகிறது. இந்தியாவில் இவர்களை எதிர்கொள்வது கடினமே. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் உண்மையான சிறந்த வீரர்கள் உள்ளனர். இது இன்னொரு கடினமான தொடரே.
அஸ்வின், ஜடேஜா இல்லாதது குறித்து..
இது டெஸ்ட் போட்டிகள் அல்ல, இது வேறு ஒரு வடிவம், அக்சர் படேல் நன்றாக வீசி வருகிறார். சாஹல், குல்தீப் யாதவ் என்று ஸ்பின் பந்து வீச்சு நன்றாகவே உள்ளது. இவர்களை நாம் தொடர் முழுதும் ஆடியாக வேண்டும்.
பிட்ச்கள் ஃபிளாட்டாக இருக்கும், ரன் விழாவுக்கு நாங்கள் ரெடி. எங்கள் இந்த ஒருநாள் தொடர் அணி ஸ்பின் பந்து வீச்சை நன்றாக ஆடும், வங்கதேசத்திலும் நிறைய கற்றுக் கொண்டுள்ளனர்.