நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பிற்கு 52% பங்களிப்பை வழங்குகின்றனர். நடுத்தர தொழில் முயற்சிகளும் நடுத்தர தொழில் முனைவோருமே தற்போதைய பொருளாதாரத்தின் இயங்கியாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்து நிலை ஆகிய மூன்று நெருக்கடிகளால் இத்தொழிற்துறை முடங்கியது. நாடு இறுதியில் வங்குரோத்து நிலைக்கு செல்ல நேரிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 121 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, திவுலப்பிட்டி, கடுவெல்லேகம மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பராட்டே சட்டம் மூலம் இவர்களது சொத்துக்கள் ஏலம் விடப்படும் சூழ்நிலையில்,இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் எழுப்பியதன் விளைவாக, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் சொத்துக்களை ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்த சில வாரங்களுக்கு முன்பு முடிவெடுத்திருந்த போதிலும், நாட்டில் அரசாங்கமொன்று இல்லை என்ற போக்கில், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த ஏல நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
ஆனால்,மீண்டும் ஒரு சுற்றறிக்கை மற்றும் வர்த்தமானி மூலம் அரசாங்கம் இந்த முடிவை சட்டமாக மாற்றத் தயாராகி வருகிறது.இது நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கிடைத்த நிவாரணமாகும். மக்களின் பொருளாதார செயல்முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க அரசாங்கம் மூலதனத்தை வழங்க வேண்டும். இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தொழில்களில் ஈடுபடுவர்.இதன் ஊடாக வருமானம் ஈட்டி, வட்டி மற்றும் கடனை செலுத்த முடியும்.
ஐடி பொறியாளர்களின் சொர்க்கபுரியாக நாட்டை மாற்றுவோம்.
நமது நாட்டில் ஐடி திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கி, ஐடி பொறியாளர்களின் சொர்க்க தேசமாக இலங்கையை மாற்றுவோம்.ஐடி பணியாளர்களை ஏற்றுமதி செய்யும் இயலுமையை உருவாக்க வேண்டும். உள்நாட்டு சேவைத் தொழிலின் ஊடாக மட்டுமே பணம் ஈட்டும் பிற்போக்குத்தனமான பலவீனமான கொள்கையைக் கொண்ட நாடாக எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.