வியப்பூட்டும் வரலாற்று அதிசயம்! குஜராத்தில் ஓர் தாஜ்மஹால்
இதன் ஒவ்வொரு அடிகளும் பார்க்கும் நம்மை நகரவிடாமல் ரசிக்க வைக்கிறது. கலைநயமான வேலைப்பாடுகளால் செறிந்து கிடக்கிறது.
இது பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட ஒரு கிணறு என்பதைவிட, காலம் கடந்தும் சிறந்த ஒரு காட்சிப்பொருளாக மெச்சப்பட வேண்டும் என்ற நோக்கில், தன் திறமை மீது ஆழ்ந்த நம்பிக்கையுள்ள கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
குஜராத்தில், காந்திநகர் மாவட்டத்தில் அகமதாபாத் நகரில் அடாலஜ் என்ற இடத்தில்தான் இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, அழகிய அடுக்குமாடி அமைப்பு கொண்ட இந்த கிணறு காணப்படுகிறது.
இரண்டு மன்னர்கள் கட்டியது
இது 1499 ம் ஆண்டில் முஸ்லிம் அரசன் முகமது பெகடாவால், இந்து ராணியான ரூப்காவுக்காக கட்டியது. ராணி ரூப்கா, வகேலா வம்சத்தின் பிரபுவான வீரசிங்கின் மனைவி ஆவார்.
ஆனாலும், இந்த படிக்கிணறு மாளிகையின் முதல் மாடியில் கிழக்கு நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ள, பளிங்கு பலகையின் சமஸ்கிருத கல்வெட்டுப்படி,1498 லேயே அடாலஜ் படிக்கிணறு கட்டுமானப்பணி துவங்கியுள்ளது.
தண்டை தேசத்தின் வகேலா வம்சத்தின் பிரபுவான வீரசிங்கால் துவங்கப்பட்டு, கட்டுமானப்பணி நடந்துள்ளது. அப்போது, அண்டை மாநில மன்னனான முகமது பெகடாவால் வீரசிங் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு, ஏற்கனவே இந்து கட்டடகலை பாணியில் இருந்ததில், முஸ்லிம் கட்டடகலை பாணியை சேர்த்து, இப்படி உருவாக்கப்பட்டதாக கூறுகிறது.
கிணற்றின் பயன்கள்
இந்த கிணறு ஐந்து அடுக்கு மாடிகள் உயரத்தை ஆழத்தில் கொண்டுள்ளது. இது குஜராத்தின் வறண்ட நிலப்பகுதியில் மழைநீர் சேமிப்புக்காகவும் அமைக்கப்பட்டிருக்கலாம்.
இந்த தண்ணீர் குடிக்க, குளிக்க, துவைக்க என பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாகவே இதன் சுற்றமைப்புகள் காணப்படுகின்றன. மேலும், வண்ணமயமான திருவிழாக்களுக்கும் சடங்குகளுக்கும் இந்த கிணறு நீர் தந்து பயன்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேலான கிணறுகள்
இதுபோன்ற பல படிக்கிணறுகள், அல்லது படிக்குளங்கள் குஜராத்தின் மேற்கே உள்ள வறண்ட பகுதியில் காணப்படுகின்றன.
ஆண்டுமுழுதுக்குமான நீர் ஆதாரத்தை சேமித்துக்கொள்ள கோடைகாலத்தில் நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, பருவமழைக் காலத்தில் போதுமான நீரை நிரப்பிக்கொள்ள படிக்கிண்றுகள் அமைக்கும் வழக்கம் அங்கு இருந்துள்ளது.
அந்த பகுதி முழுவதும் 120 க்கும் மேற்பட்ட கிணறுகள் இப்போதும் காணப்படுகிறது. 700 க்கும் மேற்பட்ட கிணறுகள் இருந்ததற்கான தடங்களும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடாலஜ் படிக்கிணறு பெரிதும் கட்டடகலை சிறப்பும் சேர்ந்திருப்பதால் பிரபலமாகியுள்ளது. இப்பகுதியில் அதுபோல மேலும் 4 பெரிய கிணறுகளும் உள்ளன.
இந்த கிணறுகள் எல்லாம் ஒரே கால கட்டத்தில் கட்டப்பட்டவை அல்ல. கி.பி. 5 லிருந்து. கி.பி.19 ம் நூற்றாண்டு வரை பல்வேறு காலங்களில் கட்டப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளை கவரவும் பயணம் செய்யும் வியாபாரிகள் வழிப்பாதையில் பயனடையவும் கட்டப்பட்டிருப்பதாக வரலாறுகளில் தெரிகிறது.
பார்வையாளர்களை கவரும் பரவசமான இந்த படிக்கிணறு, அகமதாபாத்தில் இருந்து 18 கி.மீ. வடக்கேயும் குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
பெரும்பாலான வரலாற்றுப் புகழான கட்டடங்களில் அந்த காலகட்ட ஆட்சியாளர்கள் கட்டியதாகவே சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் கூலி கொடுத்தவர்கள் அவ்வளவுதான்.
சில வியப்பான வடிவமைப்புகளை பார்க்கும்போது, அந்த விரல்களுக்கு உரியவன் முகத்தையே நம் விழிகள் தேடுகிறது. வரலாற்றில் இதுவும் ஒரு மோசடிதான்.