விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: பயணிக்கு உடல்நிலை பாதிப்பு
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிர்ஜு சல்லா என்ற 35 வயதான தொழில் அதிபர் நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் உயர்வகுப்பில் மும்பையில் இருந்து ராஜ்கோட் சென்றுள்ளார். விமானத்தில் அவருக்கு காலை உணவாக புரோட்டா, பழங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றுடன் வழங்கப்பட்ட சன்னா மசாலாவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. ஆனால் கரப்பான் பூச்சி இருந்தது தெரியாமல் அந்த உணவை சாப்பிட்டதால் அவருக்கு விமானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் விமான பணியாளர்களிடம் கூறிய போது அவர்கள், மற்றொரு பிளேட் உணவு வழங்குவதாக கூறியுள்ளனர். ஆனால், பிர்ஜு சல்லாவுக்கு எந்த மருத்துவ உதவியும் அளிக்கவில்லை.
இது குறித்து இமெயில் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திகு அவர் புகார் அளித்துள்ளார். பிர்ஜு சல்லாவின் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள ஜெட் ஏர்வேஸ் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.