றோயல் மற்றும் தோமியன் ஆகிய கல்லூரிகளின் பழைய மாணவர்களுடன் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் ஒன்று அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையை திங்களன்று வந்தடைந்தது.
145ஆவது நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமரான றோயல் – தோமியன் மாபெரும் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கவே இரண்டு கல்லூரிகளினதும் பழைய மாணவர்கள் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.
‘றோயல் – தோமியன் ஏயார்பஸ்’ என்ற சுலோகத்துடன் மெல்பர்னிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் 605 விமானம் கொழும்பை வந்தடைந்தது.

இந்த விமானம் மெல்பர்னிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் விமானிகள் அறையின் யன்னல்கள் வழியாக இரண்டு கல்லூரிகளினதும் கொடிகள் அசைக்கப்பட்டன.
இந்த விமானம் றோயல் – தோமியன் பழைய மாணவர்களால் பிரத்தியேகமாக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது.
இதன் மூலம் சகோதரத்தும், நட்புறவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த பழைய மாணவர்கள் உணர்த்தியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வியாழக்கிழமை (07) ஆரம்பமாகவுள்ள 145ஆவது றோயல் – தோமியன் மாபெரும் கிரிக்கெட் சமரைக் கண்டுகளிக்க இன்னும் பல நாடுகளிலிருந்து இரண்டு கல்லூரிகளினதும் பழைய மாணவர்கள் இலங்கை வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
நீலவர்ணங்கள் கிரிக்கெட் சமரானது வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல உலகம் முழுவதும் பரந்து வாழும் இரண்டு கல்லூரிகளினதும் ஒன்றுகூடலாக அமைகின்றமை விசேட அம்சமாகும்.