விமானத்தில் சிறுமியை கடத்திய நபர்: அதிரடியாக காப்பாற்றிய பணிப்பெண்
அமெரிக்கா நாட்டில் சிறுமியை நபர் ஒருவர் கடத்தியதை நூதனமாக கண்டுபிடித்த விமானப் பணிப்பெண் அவரிடமிருந்து சிறுமியை காப்பாற்றி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இயங்கி வரும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் Sheila Frederick(49) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சீட்டில் நகரிலிருந்து விமானத்தில் பயணம் செய்தபோது 14 வயதுடைய சிறுமியை பார்த்துள்ளார்.
சிறுமிக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் நாகரீக உடையிலும், சிறுமி பழுதான ஆடையையும் உடுத்திருந்ததால் பணிப்பெண்ணிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை தீர்த்துக்கொள்ள சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். ஆனால், சிறுமியிடம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் அருகில் அமர்ந்திருந்த நபர் மட்டுமே இடைமறித்து பதிலளித்துள்ளார்.
நபரின் நடவடிக்கை சந்தேகத்தை அதிகரிக்க சிறுமியிடம் கண் ஜாடை ஒன்றை காட்டிவிட்டு விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார்.
பின்னர், கழிவறையில் ‘நீ எதாவது சிக்கலில் இருக்கிறாயா?’ உனக்கு உதவி தேவையா?’ என தாளில் எழுதி வைத்துவிட்டு பணிப்பெண் திரும்பியுள்ளார்.
பணிப்பெண் திரும்பியதும் சிறுமி கழிவறைக்கு சென்று அந்த கடிதத்தை படித்துவிட்டு ‘ஆமாம், என்னை அந்த நபர் கடத்தி செல்கிறார். எனக்கு உங்களுடைய உதவி தேவை’ என பதில் எழுதி வைத்து விட்டு இருக்கைக்கு திரும்பியுள்ளார்.
கழிவறைக்கு மீண்டும் சென்ற பணிப்பெண் சிறுமியின் பதிலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், இதனை விமானிகளுக்கு உடனடியாக தெரிவித்துள்ளார்.
இறுதியாக, விமானிகள் சான் பிரான்ஸிஸ்கோ நகர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் தரையிறங்கியதும், அங்கு காத்திருந்த பொலிசார் நபரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.
சிறுமியை தனது சமயோசித திறமையால் மீட்க உதவிய பணிப்பெண்ணை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதாகவும், கடத்தப்பட்ட 400 நபர்கள் மீட்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.