விபுலானந்தர் சமநீதியான பண்பாட்டின் தலைமகனாக கல்விப்புலத்தில் ஆற்றிய பணி நிகரற்றது என்று முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகத்திலேயே முதல் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பதவி வகித்த சுவாமி அவர்கள் அடிமட்ட சேரிவாழ் தமிழ் பிள்ளைகளுக்கு கல்வியறிவூட்டுவதில் அயராது உழைத்தமையும் அதனால் அவர் எதிர் கொண்ட எதிர்ப்புகளும் மறக்க முடியாதவை. இவ்வாறே மகாகவி பாரதியை இன்று நாம் அறியவும் கொண்டாடவும் வழிசமைத்த விபுலான புரட்சி உன்னதமானது.
புலமையின் உச்சமாக ,இன்று நாம் ஆராதிக்கும் பல்துறை இணை ஆய்வாளராக அவர் எமக்களித்த யாழ் நூலும் ஏனைய உலகப்பண்பாடுகளை, இலக்கியங்களை அறிமுகம் செய்த ஆக்கங்கலும் எம் ஆழமான விரிந்த சிந்தைக்கு வழிவகுப்பன. முதல் தமிழ் பேராசிரியர் , முத்தமிழ் வித்தகர் அறிவியல் வாழ்வியல் முழுமை வசப்பட வசப்பட எம் பண்பாடு நிமிர்வினைக்காணும்.
ஆசிரியராக அதிபராக அவர் உலாவிய மானிப்பாய் இந்துக்கல்லூரியின் இன்றைய தலை முறை மாணவர்கள் முன்னிலையில் மிகப்பொருத்தமான முறையியல் இந் நிகழ்வினை ஒழுங்கமைத்த தமிழி அமைப்பினரும் கல்லூரி சமூகத்தினரும் எம் போற்றுதற் குரியவர்கள்… என்று மேலும் அவர் தெரிவித்தார்.
விபுலானந்த அடிகளாரின் நினைவு நாளான 19.07. 2024 கல்லூரி அதிபர் திலீப்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் அடிகளாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை சூட்டினார்.
தமிழி அமைப்பாளர் நிவேதன் அறிமுக உரையைத் தொடர்ந் ந்து பேராசிரியரின் நினைவுப்பேருரையும் கௌரவிப்பும் இடம்பெற்றன.