வித்தியா கொலை ட்ரயல் அட்பார் மன்றின் 12வது நாள் விசாரணையில் இன்று 35வது சாட்சியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா தனது சாட்சியத்தை மீண்டும் தொடர்ந்தார் “வேறு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரையும் தாம் எதேச்சையாக சந்தித்ததாகவும் அவருடனான கலந்துரையாடலின் போது கை தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட வீடியோக்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா என தான் விசாரித்ததாகவும் ‘தன்னையும் தனது சகோதரரையும் அரச தரப்பு சாட்சியாளர்களாக மாற்றினால் இரண்டு கோடி ரூபாவை வழங்க முடியும் என 9ஆம் இலக்க சந்தேகநபரான சுவிஸ்குமார்’ குறித்த மென்பொருள் பொறியியலாளரிடம் கூறியிருந்ததாகவும்.
சுமார் ஒன்றரை வருடங்கள் சந்தேகநபர்களிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் சந்தேகநபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கை தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட அழைப்பு விபரங்களின் அடிப்படையில் 10 பேரிடம் மேலதிகமாக விசாரணைகள் மேற்கொண்டு சந்தேகநபர்களான சந்திரகாசன் மற்றும் துஷாந்தன் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகள் ஊடாக மாப்பிள்ளை எனப்படும் நடராசா குமரேசனுடன் பல தடவைகள் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் எட்டு மாதங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாப்பிள்ளை என்பவரிடம் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் வாக்கு மூலம் பதிவு செய்ததாகவும்.
மேலும் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த வீதியால் பயணித்ததாக அறியக்கிடைத்த ஒருவரான பாலச்சந்திரன் என்பவரிடம் அவருடைய வீட்டில் வைத்திய வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் என்பவரிடமும் தனுராம், தனுஜன் ஆகிய இரண்டு மாணவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் சம்பவ தினத்திற்கு முதல் நாள் புங்குடுதீவு ஆலடிச்சந்தியில் சுவிஸ்குமார் மற்றும் அவரின் சகோதரன் சசிதரன், குகநாதன், கோகிலன் ஆகியோர் வேனில் இருந்ததாக இலங்கேஸ்வரன் வாக்குமூலம் வழங்கினா் ஆனாலும் குறித்த சந்தேகநபர்கள் மே மாதம் 8ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை வௌ்ளவத்தையிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தமைக்கான பதிவு சான்று மாத்திரம் கிடைத்ததாகவும்.
இருப்பினும் சந்தேகநபர்கள் 13ஆம் திகதி 2 மணி தொடக்கம் 3 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதியில் சூதாட்ட விடுதி மற்றும் மதுபான விடுதியொன்றில் மது அருந்துவது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. 5ஆம் சந்தேகநபரின் வவுனியாவில் உள்ள வீட்டிலிருந்து கறுப்பு நிற ஐபோன் ஒன்று, துஷாந்தன் என்ற சந்தேகநபரின் வீட்டிலிருந்து கையடக்க ஒரு தொலைபேசி, ஒரு டெப், ஒரு மடிக்கணினியும், 9ஆம் இலக்க சந்தேகநபர் சுவிஸ்குமாரின் மனைவி கொழும்பு -15 முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்த வீட்டிலிருந்து கை தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட குறித்த சான்றுப்பொருட்கள் பகுப்பாய்விற்காக நீதிமன்ற அனுமதியுடன் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லை என கூறி 9 சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டி” தனது சாட்சியத்தை நிறைவு செய்தார்.