யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (ட்ரயல் அட்பார்) முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யாழ். மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசத் இந்த நீதிபதிகள் குழாமை நியமித்திருந்தார்.
வித்தியாவின் கொலை தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் இருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது தடுத்து வைக்கப்ட்டுள்ள 10 பேரில் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் யாழ். மேல்நீதிமன்றத்தில் நாளைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த நீதிபதிகள் குழாம் கடந்த மே மாதம் 29ஆம் திகதி தனது முதலாவது அமர்வை நடத்தியிருந்தது. இதன்போது சந்தேகநபர்களை 12ஆம் திகதி முன்னிலையாகும் படி உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தி நாளை முதன்முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.