சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ வலிமையோடு இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு தூரம் என்று சீனா கேட்டிருக்காது இன்றைக்கு வடக்கில் மட்டுமல்ல சிறிலங்காவின் எந்தவொரு முலையிலும் சீனா ஒருபோதும் கால் பதித்திருக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம், விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமின்றி இந்திய எல்லைகளையும் பாதுகாத்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. வடக்கில் சீனாவின் கால் பதிப்பு தொடர்பில் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை பின்வருமாறு:
சீன லங்காவாக மாறும் சிறீலங்கா
“தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலைப் போருக்காக பெற்ற ஆதரவில் தீவிரமாகத் துவங்கி ஐ.நாவில் சிறீலங்காவை பாதுகாப்பது தொடக்கம் சீனா – சிறீலங்கா அரசியல் உறவு பின்னர் மகிந்த ராஜபகச்சவின் தேர்தல் மற்றும் பதவி இருப்புக்களிற்கான அபிவிருத்தி முதலீட்டு நடவடிக்கைகளில் மேலும் நெருக்கமானது. இதனால் சிறீலங்காவில் முதலீடுகளையும் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்த சீனா பின்னதாக சிறீலங்கா வை தனது கடன் பொறிக்குள் சிக்கவைத்து சிறீலங்காவின் நிலப்பரப்பு தொடங்கி கடல் பகுதிகளையும் வாங்கும் அளவிற்கு தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலுக்கு சீனாவின் ஆதிக்கமும் அபாயமும் முடக்கி விடப்பட்டுள்ளது. பௌத்த பந்தம் என்ற பெயரால் இந்தியாவையும் சீனாவையும் மயக்கும் இரட்டைப் போக்குக் கொண்ட சிறீலங்கா, போர் மற்றும் பொருளாதாரத்திற்காக பட்ட கடன்களுக்காக தற்போது சீனாவின் மாகாணமாக உருமாறி வரும் நிலையில் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த சிறீலங்காவும் சீன லங்காவாக மாறுகின்ற அபாயம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் னேநிலைக்களத்தில் மிகுந்த ஆபத்தை உருவாக்கும் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறோம்.
வடக்கில் கால் பதிக்கும் சீனா
சிறீலங்காவுக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவொன்று அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை கவனிக்க வேண்டிய அரசியல் நகர்வாகும். சீன தூதுவர் குய் சென் ஹாங் வடக்கு கிழக்கு தமிழர்களின் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த யாழ் நூலகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முதலிய இடங்களுக்கு பயணம் செய்துள்ளனர். தமிழர்களின் மரபுப்படி மேல்சட்டயை கழற்றி நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொண்டமை ஈழத் தமிழ் மக்கள் இனத்திற்குள் உணர்வு புரவமாக ஊடுருவுகின்ற உளவியல் முயற்சி என்பதையும் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாட்கள் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் அங்கே தங்கியிருந்ததும் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இந்தப் பயணமும் தங்குதலும் வடக்கு கிழக்கில் சீனாவின் குடியேற்றத்திற்கான கிரகப்பிரவேசமாக கருதப்பட வேண்டும் என்பதையும் அது குறித்து விழிப்பு கொள்ள வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும், இந்திய தேசத்திற்கும் குறிப்பாக இலங்கைக்கு முன்னவரிசையில் இருக்கும் தமிழகத்திற்கும் உள்ளது என்பதையும் அவதானிப்பு மையம் தெளிவுபடுத்துகிறது.
இந்தியாவே இலக்கு
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் குய் சென் ஹாங், ஈழத்தில் இருந்து கைகளை நீட்டி இந்தியா எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? என்று கேட்டதன் வாயிலாக “உங்கள் தலைகளை எட்டிப் பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம் என்ற எச்சரிக்கை அறிவிப்பு என்பதுடன் சிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவை இலக்கு வைப்பதற்காகவே இடம்பெறுகின்றது என்பதையு உணர்த்தியுள்ளது. இதுவரை காலமும் இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகள் போர் மற்றும் ஊடுருவல் பதற்றங்களைக் கொண்டிருக்கையில் தென்மாநிலங்கள் அமைதியில் இருந்து வந்தன.
தற்போது சீனா அம்பாந்தோட்டை, கொழும்பு எனப் படிப்படியாக தனது ஆக்கிரமிப்பை தனக்கேயுரிய ஆக்கிரமிப்புப் பாணியில் முன்னெடுத்து வருகின்றமை இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு இன்னமும் உச்சம் பெறுகின்ற நிலையில் சிறீலங்காவின் பல இடங்கள் மாத்திரமின்றி வடக்கு கிழக்கு தமிழர் தாயகமும் சீனாவிற்கு தாரை வார்க்கும் அபாயம் காணப்படுகின்றது.
இந்தியாவுக்கும் அரணாயிருந்த புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த வரையில், சீனா வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி சிறீலங்காவின் தென் பகுதியில் கூட கால் பதிக்க அச்சமடைந்திருந்தது. அக் கால கட்டத்தில் இனவழிப்பு போரிற்காக சில நூறு சீனர்கள் சிறீலங்காவில் தங்கியிருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குடியேறி உள்ளமையை குறித்து சிங்கள மக்களும் ஈழத் தமிழர்களும் இந்தியாவும் விழித்துக் கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள், ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் இந்தியாவுக்கும் காவலாக இருந்தவர்கள் என்பதை இனியேனும் உணர வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் உள்ள போதே சிறீலங்கா சீனாவின் காலனியாக மாறி வருகிறது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒற்றையாட்சி நீடிக்கப்பட்டால் மாகாண அரசு இறைமையற்ற நிலையில் இருப்பதன் வாயிலாக சீனாவின் ஆதிக்கம் வடக்கு கிழக்கில் இன்னும் அதிகரிக்கப்படும் என்பதையும் எச்சரிக்கின்றோம். இதேவேளை தமிழக – ஈழ மீனவர்களிற்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் வாயிலாகவும் சீனா சிறீங்காவில் காலூன்றவும் அதன் ஊடாக ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் ஆபத்து ஏற்படுத்த முனைவதையும் நாம் விழிப்போடு முறியடிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை சிங்களவர்கள் ஒரு புறம் ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், சீனாவும் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முயல்வது ஈழத் தமிழ் மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அனைத்து ஆக்கிரமிப்புக்கள் மற்றும் போர் இலக்குகளுக்கு தீர்வாகவும் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படுவதன் வாயிலாகவே தமிழ் மக்களின் பாதுகாப்பு மாத்திரமின்றி இந்தியாவின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்ற உண்மையை உணர்ந்து இந்தியா துணிந்து செயற்பட வேண்டும் என்பதையும் ஈழத் தமிழ் மக்களின் சார்பில் அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டுகிறது…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.