முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட பயிற்சி முகாமிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளினால், பெரிய மோட்டார் குண்டுகள் இரண்டு, ஒரு தொகை யுத்த உபகரணங்கள் ஆகியனவே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
புலிகளினால், மேற்படி இடத்தில் யுத்தப் பயிற்சி முகாமொன்று பராமரிக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், மேற்படி இடத்தை அகழும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே, இந்த யுத்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டனவென படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட “பபா மோட்டார்” என்றழைக்கப்படும் 81 மில்லிமீற்றர் மற்றும் 73 மில்லிமீற்றர் வகைகளைச் சேர்ந்த மோட்டார் குண்டுகள் இரண்டு, ஆர்.பீ.ஜி குண்டொன்று, டி.என்.டி இணைவு அடுக்கி, டி.என்.டி பெண்டி, 73,81,85 மற்றும் 122 வகைகளைச் சேர்ந்த மோட்டார் உருக்கிகள் ஒவ்வொன்று, என்.ஆர். 7 வகையைச் சேர்ந்த கைக்குண்டு, ஆர்.பீ.ஜி. குண்டுகளில் சில பகுதிகள், இனங்காணப்படாத கைக்குண்டு, இனங்காணமுடியாத புகைக்குண்டு, பரா குண்டுகளின் பகுதிகள் உள்ளிட்ட யுத்த உபகரணங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.