நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு முன்னாள் போராளிகள் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். என்றால், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் நாடு கடத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு தம்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் சமூகத்தில் இணைத்த முன்னாள் போராளிகளை மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் என்ற முன்னாள் போராளிகளின் கட்சி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் புனர்வாழ்வு பெற்ற விடுதலையான முன்னாள் போராளியான யாழ் பல்கலைக்கழகத்தின் நுன்கலைப்பீட விரிவுரையாளரான கண்ணதாஸிற்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும் அண்மைக்காலமாக வடக்கில் தொடரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் ன்னாள் போராளிகளை இணைத்து தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் தெளிவுபடுத்தும் முகமாக இன்று கிளிநொச்சியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனநாயகப் போராளிகள் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் மாத்திரமன்றி கடந்த சனிக்கிழமை யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடனும் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்துவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.
முன்னாள் போராளிகள் மீது திட்டமிட்டு பழிகளை சுமத்தி அவர்களை வேட்டையாடுவதுதான் தமது திட்டம் என்றால் முன்னாள் போராளிகளை நடாடு கடத்துமாறும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டு செயற்படுவதில்லை என்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.