புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் சந்தேக நபர் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உதவிபுரிந்தாக கூறப்படுவது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவளித்தால் நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
தேசிய அரசின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
சுவிஸ் குமாரை தப்பவிடுவதற்காக விஜயகலா மகேஸ்வரன் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பிலான காணொளியொன்று அண்மையில் வெளியாகியது.
இது குறித்து பொலிஸாரால் நடவடிக்கையெடுக்கப்படுமா என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், வித்தியா கொலை தொடர்பிலான வழக்கு ரயல் எட்பார் முறையில் தற்போது யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. நீதிமன்றமே இந்த விடயம் குறித்து நடவடிக்கையெடுக்க முடியும். நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு விசேட பணிப்புரை ஏதும் விடுக்கப்படின் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கையெடுக்க முடியும் – என்றார்.